இந்தியாவில் இதுவரை ஒரே முதலமைச்சருக்கே சொந்தமான தேசிய விருது சாதனை
இந்திய திரைப்பட வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் சில சாதனைகள் காலம் கடந்தும் தனித்துவமாகவே நிலைத்து நிற்கின்றன. அந்த வகையில், தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான (Best Actor) விருதை வென்று பின்னர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்த ஒரே தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) என்பது இந்திய அரசியல் மற்றும் சினிமா வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.தேசிய திரைப்பட விருது என்பது இந்திய திரைப்படத் துறையின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகும். இந்த விருது, ஒரு நடிகரின் பிரபலத்திற்காக அல்ல; அவரது நடிப்புத் திறமைக்காக வழங்கப்படுகிறது. 1971 ஆம் ஆண்டு வெளியான 'ரிக்ஷாக்காரன்' திரைப்படத்தில் வெளிப்படுத்திய நடிப்பிற்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் ஏழை மக்களுக்காக போராடும் கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். பின்னர் அவர் அரசியலிலும் களமிறங்கி, 1972-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) தொடங்கினார். 1977 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற அவர், தொடர்ந்து மூன்று முறை மக்களின் ஆதரவை பெற்று நீண்ட காலம் ஆட்சி செய்தார். திரைத்துறையில் பெற்ற தேசிய அங்கீகாரமும், அரசியலில் பெற்ற மக்களின் நம்பிக்கையும் இணைந்ததே அவரது பயணத்தை இந்திய வரலாற்றில் தனித்துவமாக்குகிறது. இந்திய அரசியலில் பல திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஆனால் அவர்களின் திரைப்பயணமும் அரசியல் பயணமும் எம்.ஜி.ஆரின் சாதனையிலிருந்து வேறுபடுகிறது.
என்.டி. ராமராவ்
தெலுங்கு திரையுலகின் புரட்சிகர நடிகரான என்.டி.ராமராவ் பின்னர் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக உயர்ந்தார். ஆனால் அவர் தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெறவில்லை.
ஜெ. ஜெயலலிதா
பிரபல நடிகையாக இருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்த ஜெயலலிதா, திரைப்பட உலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகைக்கான விருதைப் இவரும் பெறவில்லை.
பவன் கல்யாண்
தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தற்போது ஆந்திர மாநிலத்தில் துனை முதலமைச்சர் பதவியில் உள்ளார். ஆனால் தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றதில்லை.
விஜய்
தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி நடிகரான விஜய், போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பதவி வகித்தாலும் இதுவரை தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான விருதை இவர் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆரின் சாதனை இன்னும் தனித்துவமானது.
ஒரு நடிகர் தேசிய அளவில் சிறந்த நடிகராக அங்கீகரிக்கப்படுவது ஒரு பெரிய சாதனை. அதே நபர் பின்னர் மக்களின் வாக்குகளால் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவது முற்றிலும் வேறுபட்ட சாதனை. இந்த இரண்டு உயரிய அங்கீகாரங்களையும் ஒரே வாழ்க்கையில் பெற்றிருப்பது எம்.ஜி.ஆரை இந்திய வரலாற்றில் தனி இடத்தில் நிறுத்துகிறது. இந்திய சினிமா மற்றும் அரசியல் வரலாற்றை ஒன்றாகப் பார்த்தால், எம்.ஜி.ஆரின் பயணம் தனித்துவமானது. தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகராக அங்கீகாரம் பெற்றதுடன், தமிழக முதலமைச்சராகவும் மக்களின் நம்பிக்கையை வென்றார். பல நடிகர்கள் அரசியலுக்கு வந்திருந்தாலும், இந்த குறிப்பிட்ட சாதனை இன்று வரை எம்.ஜி.ஆரின் பெயருடன் இணைந்தே பேசப்படுகிறது.