முதல்வர் விஜயுடன் செஸ் விளையாடிய அனுபவம்: பிரக்ஞானந்தா பகிர்ந்த மகிழ்ச்சி

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை 2 முறை வீழ்த்தி, நடப்பு உலக சாம்பியன் குகேஷை 34 மூவ்களில் வீழ்த்தி இறுதி சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி   பட்டம் வென்றார். இத்தொடரில் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இந்த வெற்றிக்கு பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜயுடன் நடைபெற்ற சந்திப்பில் செஸ் ஆட்டத்தில் கலந்து கொண்டார். 
ஆட்டம் முடிந்த பிறகு தனது அனுபவத்தை பகிர்ந்த பிரக்ஞானந்தா, "முதலமைச்சர் விஜயுடன் செஸ் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதியில் அந்த ஆட்டத்தில் நான் வெற்றி பெற்றேன். ஆனால் அவர் மிகவும் திறமையாகவும் சிந்தித்து விளையாடினார். அவர் இவ்வளவு நன்றாக செஸ் விளையாடுவார் என்பது எனக்கு முன்பாக தெரியாது" என்று தெரிவித்தார்.
செஸ் விளையாட்டின் மீதான முதலமைச்சரின் ஆர்வமும் திறமையும் இந்த சந்திப்பின் மூலம் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. போட்டி மனப்பான்மை மற்றும் விளையாட்டு மீதான மரியாதையுடன் நடைபெற்ற இந்த ஆட்டம், விளையாட்டு மற்றும் பொதுவாழ்க்கை துறைகளுக்கிடையிலான நல்ல தொடர்பின் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
பிரக்ஞானந்தாவின் இந்த கருத்து சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. செஸ் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான அவர், முதலமைச்சரின் ஆட்டத்திறனை பாராட்டியிருப்பது பலரது கவனத்தை பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டின் வளர்ச்சிக்கும், இளைஞர்களிடையே அதன் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த வெற்றிக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பிரக்ஞானந்தாவிற்கு ரூபாய் ஐம்பது லட்சம் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.