“C. ஜோசப் விஜய் என்னும் நான்…” – தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற தவெக தலைவர் விஜய்: முதல் 3 அதிரடி திட்டங்கள் அறிவிப்பு

தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்று, இலவச மின்சாரம், சிங்க பெண் அதிரடிப்படை மற்றும் போதை தடுப்பு பிரிவு உள்ளிட்ட 3 திட்டங்களில் கையெழுத்து

 

C. ஜோசப் விஜய் என்னும் நான், உறுதியோடும் ஆண்டவன் மீதும் ஆணையிட்டும் முதலமைச்சராகப் பதவியேற்கிறேன்” என்று தவெக தலைவர் விஜய்  தமிழகத்தின் முதலமைச்சராக 
பதவியேற்றார். அவருடன் அவரது தலைமையிலான ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றனர். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, முக்கியமான மூன்று திட்டக் கோப்புகளில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். முதலாவதாக, 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இரண்டாவதாக, “சிங்க பெண்” சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்கும்  கையெழுத்திடப்பட்டது. மூன்றாவதாக, மாவட்ட வாரியாக போதை தடுப்பு பிரிவு அமைக்கும் திட்டக் கோப்பிலும் அவர் கையெழுத்திட்டார். மேலும், “மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட தவறாக பயன்படுத்த மாட்டேன்” என்று உறுதியளித்த முதலமைச்சர் , மாநிலத்தில் பத்து லட்சம் கோடிக்கு மேல் கடன் இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறினார்.அடிப்படை வசதிகளான கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை உள்ளிட்ட முக்கிய தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். “இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைவரையும் சமமாக பார்க்கும் அரசாக இது இருக்கும்” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், மாநிலத்தின் தற்போதைய நிதிச் சுமையை கருத்தில் கொண்டு, மக்கள் தனக்கு சிறிது அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்று யாரேனும் ஆட்டம் போட நினைத்து இருந்தால் அந்த எண்ணத்தை அழித்துவிடுங்கள் என்று தவெக தொண்டர்களுக்கும் அறிவுறுத்தினார்.