வரவேற்பை பெற்றுள்ள குரோம்பேட்டை MIT பூங்கா: இலவச ஜிம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு வசதிகள்
குரோம்பேட்டை MIT மேம்பாலத்தின் கீழ் ரூ.46.80 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள MIT பூங்கா.
குரோம்பேட்டை MIT மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள எம்ஐடி பூங்கா, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் தலைமையில், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி அவர்களால் 18.02.2026 அன்று திறந்து வைக்கப்பட்டது. 2025–26 ஆம் ஆண்டிற்கான பொது நிதியின் கீழ் ரூ.46.80 இலட்சம் செலவில் இந்த MIT பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பல பூங்காக்கள் அமைந்துருந்தாலும், குரோம்பேட்டை, சிட்லப்பாக்கம், சானடோரியும் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த பூங்கா ஒரு பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது.
மேம்பாலத்தின் கீழ் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்களும், அழகிய விளக்குகளும் மக்களை வெகுவாக கவர்கின்றன. குழந்தைகள் விளையாட ஏதுவாக ஊஞ்சல், சர்க்கஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகள் நடனம் ஆட சிறிய மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இளம் தலைமுறையினரை கவரும் வகையில் கேரம், சதுரங்கம் போன்ற உள்ளரங்கு விளையாட்டு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.